இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு - சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தகவல்

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-29 21:51 GMT
புதுடெல்லி,

 டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங்கே மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று அங்குள்ள வசதிகளை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், நேற்று ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கொரோனாவில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கொரோனா பலி விகிதம் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பலி விகிதம் 1.11 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்தாலும், ஒவ்வொரு மரணமும் வேதனையானதுதான்.

கொரோனாவுக்கு எதிரான சிறந்த ஆயுதம், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதுதான். முக கவசம் அணிதல், அடிக்கடி சோப்பால் கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை விட மிகப்பெரிய ஆயுதம் இல்லை. இதைத்தான் பிரதமர் மோடி, ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை விட குறைவாக இருந்தது. அதேபோல், இப்போதும் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையை குறைத்து விடுவோம்.

கொரோனா அறிகுறி இருப்பவர்கள் பீதி அடைய வேண்டாம். நீங்களாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு 17 லட்சத்துக்கு மேற்பட்ட பரிசோதனை செய்யும் அளவுக்கு இந்தியாவின் திறன் மேம்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போர் நடந்து வருகிறது. கொரோனாவை ஒடுக்க தனது அனைத்து அனுபவங்களையும் மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்