அமெரிக்கா மற்றும் எகிப்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து இறக்குமதிக்கு நடவடிக்கை - மத்திய அரசு தகவல்

அமெரிக்கா மற்றும் எகிப்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து இறக்குமதிக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Update: 2021-04-30 23:10 GMT
புதுடெல்லி,

கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. எனவே நாடு முழுவதும் இந்த மருந்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த மருந்தை பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி அமெரிக்கா மற்றும் எகிப்தில் இருந்து 4½ லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதில் அமெரிக்காவின் கீலேயாத் சயின்சஸ் நிறுவனத்திடம் இருந்து 75 ஆயிரம் முதல் 1 லட்சம் குப்பிகள் வரை அடுத்த ஓரிரு தினங்களுக்குள் இந்தியா வந்து சேரும் எனவும், வருகிற 15-ந்தேதிக்குள் மேலும் 1 லட்சம் குப்பிகள் கிடைக்கும் எனவும் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. இதைப்போல எகிப்தின் ஈவா பார்மா தொடக்கத்தில் 10 ஆயிரம் குப்பிகளும், அடுத்த ஒவ்வொரு 15 நாட்களுக்கும் 50 ஆயிரம் வீதம் ஜூலை மாதம் வரை வழங்கும் எனவும் கூறியுள்ளது.

இதைப்போல உள்நாட்டிலும் ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்