முழு தொகையும் கொடுக்கப்பட்டது; சீரம் நிறுவனத்திடம் 11 கோடி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர்; சுகாதார அமைச்சகம் தகவல்

3 மாத தேவைக்காக சீரம் நிறுவனத்திடம் 11 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும், இதற்காக முழு முன்பணமாக ரூ.1700 கோடிக்கு மேல் கொடுத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Update: 2021-05-03 18:52 GMT

புதிய ஆர்டர்கள்

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல மாநிலங்களில் தடு்ப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு தடுப்பூசிக்கான புதிய ஆர்டர்களை கொடுக்கவில்லை என ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதை மறுத்துள்ள மத்திய அரசு, தடுப்பூசிக்கான புதிய ஆர்டர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரூ.1732.50 கோடி

கோவிஷீல்டு தடுப்பூசிக்காக ஏற்கனவே கொடுக்கப்பட்ட 10 கோடி டோஸ்களுக்கான ஆர்டரில் 8.744 கோடி டோஸ்கள் 3-ந்தேதி (நேற்று) வரை பெறப்பட்டுள்ளன. இதைத்தவிர மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களுக்காக 11 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான முழு முன்பணமாக ரூ.1732.50 கோடி கடந்த 28-ந்தேதி சீரம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதைப்போல இந்த 3 மாதங்களுக்கு 5 கோடி கோவேக்சின் தடுப்பூசிக்காக முழு முன்பணமாக ரூ.787.50 கோடி கடந்த 28-ந்தேதி பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட 2 கோடி ஆர்டரில் 0.8813 கோடி டோஸ்கள் 3-ந்தேதி வரை கிடைத்துள்ளன.

தவறான தகவல்

எனவே மத்திய அரசு புதிய தடுப்பூசி ஆர்டர் கொடுக்கவில்லை என வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மே 2-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை 16.54 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளன. அவற்றில் இன்னும் 78 லட்சத்துக்கு அதிகமான டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளன.

அடுத்த 3 நாட்களில் 56 லட்சத்துக்கு அதிகமான டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும். தாராள மயமாக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் மத்திய அரசு தனது 50 சதவீத பங்கை தொடர்ந்து கொள்முதல் செய்து, ஏற்கனவே வழங்கப்படுவது போல மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்