தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை என்பது அடிப்படை ஆதாரமற்றது-மத்திய அரசு

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-05-04 02:02 GMT
புது டெல்லி
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த 1-ந்தேதி முதல் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல மாநிலங்களில் தடு்ப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் தொடங்கப்படவில்லை.

இது தொடர்பாக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு தடுப்பூசிக்கான புதிய ஆர்டர்களை கொடுக்கவில்லை என ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.இதை மறுத்துள்ள மத்திய அரசு, தடுப்பூசிக்கான புதிய ஆர்டர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


கோவிஷீல்டு தடுப்பூசிக்காக ஏற்கனவே கொடுக்கப்பட்ட 10 கோடி டோஸ்களுக்கான ஆர்டரில் 8.744 கோடி டோஸ்கள் 3-ந்தேதி (நேற்று) வரை பெறப்பட்டுள்ளன.இதைத்தவிர மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களுக்காக 11 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான முழு முன்பணமாக ரூ.1732.50 கோடி கடந்த 28-ந்தேதி சீரம் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதைப்போல இந்த 3 மாதங்களுக்கு 5 கோடி கோவேக்சின் தடுப்பூசிக்காக முழு முன்பணமாக ரூ.787.50 கோடி கடந்த 28-ந்தேதி பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட 2 கோடி ஆர்டரில் 0.8813 கோடி டோஸ்கள் 3-ந்தேதி வரை கிடைத்துள்ளன.

தவறான தகவல்

எனவே மத்திய அரசு புதிய தடுப்பூசி ஆர்டர் கொடுக்கவில்லை என வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை”இவ்வாறு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்