இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் உரையாடல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து இந்திய பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இருவரும் காணொலி வாயிலாக உரையாடினர்.

Update: 2021-05-04 17:25 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவில் ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு பல இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பல உலக நாடுகள் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு சர்வதேச நாடுகள், எல்லைகளைக் கடந்து இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளன.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இணைந்து செயலாற்றுவது குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன், பிரதமர் மோடி காணொலி மூலமாக உரையாடல் நடத்தினார். இந்த உரையாடலின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் 2030 ஆம் ஆண்டு வரை இந்தியா-இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டிய முக்கிய விவகாரங்கள் குறித்த தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய ‘ரோட்மேப் -2030’ என்ற பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளர்ச்சிக்கு தேவையான முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என இரு நாட்டுப் பிரதமர்களும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்