கர்நாடக ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

கர்நாடக மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க உத்தரவிட்ட கர்நாடக ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.

Update: 2021-05-07 11:17 GMT
புதுடெல்லி

கர்நாடகா மாநிலத்தில் கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்திற்கு தினசரி வழங்கக்கூடிய ஆக்சிஜனின் அளவை அதிகரித்து ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்  உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு செய்து இருந்த நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில்  விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான  துஷார் மேத்தா கர்நாடக மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு 965 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. அவர்களின் தேவைக்கு ஏற்ப நாங்களே உயர்த்தி வழங்குவோம். அதை ஐகோர்ட் சொல்லும் பட்சத்தில் எந்த வேலையும் நடைபெறாமல் அப்படியே தேங்கி விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் நாடு முழுவதும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய ஆக்சிஜன் சப்ளை முழுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

"ஏற்கனவே சென்னை தெலங்கானா ஐகோர்ட் இவ்வாறு ஆக்சிஜன் அளவை உயர்த்தி வழங்குமாறு உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி சரி செய்து கொள்கிறோம். இதில் நீதிமன்றங்கள் தலையிட வேண்டியதில்லை" என வாதிட்டார்

அப்போது குறுக்கிட்ட சுப்ரீம் கோர்ட்  நீதிபதி சந்திரசூட் "ஐகோர்ட்  தனது அத்தனை அதிகாரங்களையும் பயன்படுத்தி பல வகைகளில் ஆலோசனை நடத்தி தான் இந்த உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது. ஒரு மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் போது, அதனை பார்த்துக் கொண்டு சம்பந்தப்பட்ட ஐகோர்ட்கள் அமைதியாக இருக்க முடியாது. எனவே இந்தத் தருணத்தில் இந்த வழக்கில் நாங்கள் தலையிடுவது தேவையற்றது” எனக் கோரி மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது.

மேலும் செய்திகள்