கொரோனா பிரச்சினையில் மத்திய அரசின் தோல்வியால் நாடு தழுவிய ஊரடங்கு தவிர்க்க முடியாததாகி விட்டது; பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம்

கொரோனா பிரச்சினையில் மத்திய அரசின் தோல்வியால் நாடு தழுவிய ஊரடங்கு கொண்டு வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Update: 2021-05-07 22:49 GMT

பிரதமருக்கு கடிதம்

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உங்கள் அரசுக்கு கொரோனா பிரச்சினையிலும், தடுப்பூசி போடுவதிலும் தெளிவான கொள்கை எதுவும் இல்லை. கொரோனா பெரிதாக பரவிக்கொண்டிருக்கும்போதே, அவசரப்பட்டு வெற்றியை அறிவிப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறது. இவையெல்லாம் இந்தியாவை ஒரு ஆபத்தான கட்டத்தில் நிறுத்தி உள்ளன. கொரோனா, வெடித்து பரவி வருகிறது. ஒட்டுமொத்த அரசு எந்திரங்களும் முடங்கும் நிலையில் உள்ளன. மத்திய அரசின் தவறுகள், மற்றொரு நாடு தழுவிய ஊரடங்கை கொண்டுவருவதை ஏறக்குறைய தவிர்க்க முடியாததாக்கி விட்டன.

நிதியுதவி

நாட்டு மக்களும் ஊரடங்கை எதிர்கொள்ள தயாராகி விட்டனர். கடந்த ஆண்டு ஊரடங்கு சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம் மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க நலிந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். உணவு ஆதாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போக்குவரத்து வசதி தேவைப்படுபவர்களுக்கு அதை செய்துதர வேண்டும்.

அனைவருக்கும் தடுப்பூசி

நாட்டு மக்கள் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடுங்கள். நாடுதழுவிய ஊரடங்கால் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி நீங்கள் கவலைப்படுவது எனக்கு தெரியும். ஆனால், இந்த வைரஸ் பரவலால், மக்களுக்கு ஏற்படும் துயரமான நிகழ்வுகள், பொருளாதார பாதிப்பை விட மோசமாக இருக்கும். எனவே, பொருளாதார பாதிப்பை பற்றி கவலைப்பட வேண்டாம்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.

சென்டிரல் விஸ்டா வீணான வேலை

டெல்லியில், ரூ.13 ஆயிரத்து 450 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்டிரல் விஸ்டா திட்டத்தை தனது ‘டுவிட்டர்’ பதிவில் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இத்திட்டத்தில், புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரமாண்ட மத்திய செயலகம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு புதிய இல்லங்கள் கட்டுமான பணிகளும், ராஜபாதை சீரமைப்பு பணியும் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது பதிவில், ‘‘சென்டிரல் விஸ்டா திட்டம் முற்றிலும் வீணான வேலை. மக்கள் உயிர் மீது கவனம் செலுத்துங்கள். புதிய வீடு பெற வேண்டும் என்ற கண்மூடித்தனமான ஆணவத்துக்கு முன்னுரிமை அளிக்காதீர்கள்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்