ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; 50க்கும் மேற்பட்ட ஏழை மாணவிகள் பலி: இந்தியா கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2021-05-09 17:04 GMT
புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலைநகர் காபூலின் மேற்கே தஸ்த் இ பர்ச்சி என்ற மாவட்டத்தில் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.  இவர்களை இலக்காக கொண்டு சன்னி பிரிவு முஸ்லிம்கள் தாக்குதல் நடத்துவது வழக்கம்.

அந்த பகுதியில் மாணவிகளுக்கான பள்ளி கூடமொன்று இயங்கி வருகிறது.  இதில், ஏழை மாணவிகள் பலர் படித்து வருகின்றனர்.  அவர்களை இலக்காக கொண்டு பள்ளி கூடத்திற்கு வெளியே வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.  இந்த வெடிகுண்டுகள் நேற்று வெடித்ததில் மாணவிகள் பலர் பலியாகி உள்ளனர்.

இந்த எண்ணிக்கை இன்று 58 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதுபற்றி அந்நாட்டின் உள்துறை அமைச்சக செய்தி தொர்பு அதிகாரி தாரிக் ஆரியன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சையது அல் சுஹாடா பள்ளி கூடத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த கார் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்துள்ளது.

அந்த காரை முதலில் வெடிக்க செய்துள்ளனர்.  இதனால் அச்சமடைந்த மாணவிகள் அலறியடித்து வெளியே ஓடியுள்ளனர்.  இதனை பயன்படுத்தி கொண்டு அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடிக்க செய்யப்பட்டு உள்ளன.

இதில், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் பெருமளவில் மாணவிகள் ஆவர் என தெரிவித்து உள்ளார்.  ரமலான் மாத இறுதியில் ஈத் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்று உள்ளனர்.  இந்நிலையில், குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  எனினும், அஷ்ரப் கனி தலைமையிலான அரசு மற்றும் அதிகாரிகள் தலீபான் பயங்கரவாதிகளே இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் உளவு அமைப்புடன் இணைந்து ஊடக பணியாளர்கள் செயல்படுகின்றனர் என தலீபான் பயங்கரவாதிகள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர்.  பத்திரிகையாளர்கள் நடுநிலைமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் கவனம் வைக்க வேண்டும்.  காபூல் நிர்வாகத்தின் பிரசார ஊதுகுழலாக அவர்கள் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்தனர்.

பத்திரிகை நிருபர்களுக்கு தலீபான் பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்த அடுத்த நாளே நிதியமைச்சக ஊடக அதிகாரி மற்றும் தொலைக்காட்சி நிருபரான நிமத் ரவான் என்பவர் கந்தகார் நகரில் தனது டொயட்டா கரோல்லா காரில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்து உள்ளது.  ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது.  இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கி கொள்வது என அமெரிக்க அரசு முடிவு செய்தது.  எனினும், திட்டமிட்டபடி கடந்த 1ந்தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக தள்ளி போனது.  இதன்பின் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், காபூல் குண்டுவெடிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.  இதுபற்றி இந்திய வெளிவிவகார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், காபூலில் சையது அல் சுஹாடா பெண்கள் பள்ளியில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

இந்த காட்டுமிராண்டி தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நினைவுகளுடனும் மற்றும் பிரார்த்தனைகளிலும் நாங்கள் இணைந்திருக்கிறோம்.  இளம் மாணவிகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது, ஆப்கானிஸ்தானின் வருங்காலம் மீது நடந்த தாக்குதலாக அமைந்து உள்ளது.

இந்தியா எப்பொழுதும் ஆப்கானிஸ்தான் நாட்டு இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது.  அந்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற விசயங்களில் ஈடுபாட்டுடன் உள்ளது என தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்