தடுப்பூசி கொள்கை குறித்து பா.ஜனதா-காங்கிரஸ் டுவிட்டரில் மோதல்

தடுப்பூசி கொள்கை குறித்து டுவிட்டரில் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மோதல் நடந்தது.

Update: 2021-05-13 17:23 GMT

தடுப்பூசி போட தயக்கம்

காங்கிரஸ் தலைவர்களை குற்றம் சாட்டி, பா.ஜனதாவை சேர்ந்த மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப்சிங் பூரி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் தடுப்பூசி கொள்கைக்கு சசிதரூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் துரோகம் செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் குழந்தைத்தனமாக அடம்பிடித்து வருகிறார்கள். தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பகிரங்கமாக சந்தேகம் எழுப்பினர். அதன்மூலம், பொதுமக்கள் தடுப்பூசி போட தயங்க வைத்து விட்டனர். தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை தேர்வு செய்தது பற்றியும், ஜனவரியில் தடுப்பூசி போடத்தொடங்கியது பற்றியும் மக்களிடையே சந்தேகத்தை விதைத்தனர்.

முரண்பாடுகள்

குறிப்பாக, சசிதரூரின் முரண்பாடுகள் குறித்து ஒரு புத்தகமே வெளியிடலாம். அவர் இத்தனை நாட்கள் சந்தேகம் எழுப்பிவிட்டு, கடந்த மாதம் 28-ந் தேதி ‘பல்டி’ அடித்தார். இவர்களது பேச்சைக்கேட்டு, தடுப்பூசி போடுவதை 2 வாரங்கள் தள்ளி வைத்திருந்தால், நிலைமை என்ன ஆகி இருக்கும்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எப்போது பொறுப்பேற்கும்?

இதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

காங்கிரசின் டுவிட்டர் பதிவுகளால்தான் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டதா? எனது பதிவுகளால்தான் போதிய தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய மத்திய அரசு தவறியதா? தடுப்பூசிகளுக்கு வெவ்வேறு விலை நிர்ணயித்ததற்கும் இதுதான் காரணமா?

தனது தவறுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக, எதிர்க்கட்சி மீது பழி போடுவதற்கு பதிலாக, மத்திய அரசு எப்போது தனது தோல்விகளுக்கு பொறுப்பேற்கும்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்