உத்தரபிரதேசத்தில் 14 டாக்டர்கள் திடீர் ராஜினாமா

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றிய 14 டாக்டர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Update: 2021-05-14 00:15 GMT

உன்னாவ், 

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியாற்றிய 14 டாக்டர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மேலதிகாரிகள் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

அவர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை ஆரம்ப சுகாதார அமைய அதிகாரி, மூத்த மருத்துவ அதிகாரி ஆகியோருக்கு அனுப்பி உள்ளனர்.

ராஜினாமா செய்த மருத்துவர்களில் ஒருவர் கூறும்போது, “நாங்கள் மருத்துவ சங்கத்தின் சார்பாக போராட மாட்டோம். இது எங்கள் போராட்டம். நாங்கள் ஓராண்டுக்கு மேலாக எந்த வசதிகளுமற்ற கிராமப்புற சுகாதார மையங்களில் கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வருகிறோம். ஆனால் எங்களுக்குத் தேவையான வசதிகளோ, மதிப்பூதியமோ ஏற்படுத்தித் தரவில்லை. உதவி மாஜிஸ்திரேட்டு மற்றும் முதுநிலை மருத்துவ அதிகாரி ஆகியோர் எங்கள் பணிகளை ஆராய்ந்து இந்த வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை கேட்கும்போதெல்லாம் புறக்கணிப்பதோடு, தொடர்ந்து பணி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களின் தவறான நடத்தையும், உள ரீதியான துன்புறுத்தல்களும் எங்கள் ராஜினாமாவுக்கு காரணமாகும். இருந்தாலும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் வரை எங்களது கொரோனா பணி தடையில்லாமல் நடைபெறும்” என்று கூறினார்.

மருத்துவ அதிகாரி கூறும்போது, “அவர்கள் சொல்வதில் உண்மையில்லை” என்று மறுத்துள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்