ரெயில்கள் மூலம் நேற்று பல்வேறு மாநிலங்களுக்கு 800 டன் ஆக்சிஜன் கொண்டு சேர்ப்பு - இந்திய ரெயில்வே தகவல்

இந்தியாவில் இதுவரை பல்வேறு மாநிலங்களுக்கு ரெயில்கள் மூலம் 7,115 டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2021-05-14 02:19 GMT
புதுடெல்லி,

கொரோனாவால் எழுந்துள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு ரெயில்வேயும் களத்தில் இறங்கி இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று வரை 115 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தங்கள் பயணத்தை முடித்திருப்பதாகவும், இதில் 444 டேங்கர்களில் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் ரெயில்வே கூறியுள்ளது.

இந்த டேங்கர்கள் மூலம் 7,115 டன் மருத்துவ ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியிருப்பதாக ரெயில்வே மேலும் குறிப்பிட்டு உள்ளது. இதில் நேற்று மட்டுமே 800 டன் ஆக்சிஜனை ரெயில்கள் கொண்டு சேர்த்துள்ளன.

ஆக்சிஜன் ரெயில்கள் மூலம் இதுவரை டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியம் மட்டுமே 3,900 டன் ஆக்சிஜனும், மராட்டியம் 407 டன் ஆக்சிஜனும் பெற்றிருப்பதாக கூறியுள்ள ரெயில்வே, உத்தரபிரதேசம் (1960 டன்), மத்திய பிரதேசம் (361 டன்), அரியானா (1,135 டன்), தெலுங்கானா (188 டன்), ராஜஸ்தான் (72), கர்நாடகா (120 டன்) என பிற மாநிலங்களும் ஆக்சிஜன் பெற்றிருப்பதாக குறிப்பிட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்