கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-30 21:32 GMT
புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ந்தேதி கேரளாவில் தொடங்கும். தொடர்ந்து 4 மாதங்கள் நாட்டின் பல பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது தாமதமாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கர்நாடக கடற்கரையில் சூறாவளி சுழற்சி உள்ளதாகவும், இது தென்மேற்கு பருவமழையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் டெல்லி வானிலை மைய இயக்குனர் மொகாபத்ரா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தென்மேற்கு பருவக்காற்று ஜூன் 1 முதல் மேலும் படிப்படியாக வலுப்பெறக்கூடும். இதன் விளைவாக கேரளாவில் மழைப்பொழிவு அதிகரிக்கும். அந்தவகையில் கேரளாவில் 3-ந்தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார். முன்னதாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட ஒரு நாள் முன்னதாகவே அதாவது இன்றே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கமான அளவு இருக்கும் எனவும் வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்