கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தகவல்

கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,742 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.;

Update:2021-06-02 04:11 IST
கோப்புப்படம்
புதுடெல்லி, 

கொரோனா தொற்றுக்கு இதுவரை 1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர், 7,464 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர் என சுப்ரீம் கோர்ட்டில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்தது.

நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, அங்குள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

மே மாதம் 28-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, கடந்த ஆண்டு மார்ச்சுக்கு பிறகு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரம், இறப்புக்கு காரணம் கொரோனாவா அல்லது வேறு ஏதேனுமா என்பது உள்ளிட்ட விவரம், பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஆகியவை குறித்து மாநில அரசுகள் மே 30-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மட்டும் மே 31-ந் தேதிக்குள் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் கவுரவ் அகர்வால் ஆஜராகி, கொரோனா தொற்றுக்கு இதுவரை ஆயிரத்து 742 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர், 7 ஆயிரத்து 464 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 16 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர், 143 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர்.

பெற்றோரை இழந்துள்ள குழந்தைகள் குறித்த தகவல்களை அளிக்கவும், அவர்களை கண்டறிய ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், குழந்தைகளுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் செயலாளர் அல்லது இணைச் செயலாளர் அளவில் ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்ற நீதிபதிகள், ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க, முதல்கட்டமாக தமிழகம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மராட்டியம், பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்