இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மாதம் 67 சதவீதம் அதிகரிப்பு - மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த மாதம் 67 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Update: 2021-06-02 19:56 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

கடந்த மே மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 3 ஆயிரத்து 221 கோடி டாலராக இருந்தது. இது, முந்தைய ஆண்டு மே மாதத்தில் இருந்ததை விட 67.39 சதவீதம் அதிகம். என்ஜினீயரிங், பெட்ரோலிய பொருட்கள், மாணிக்கம் மற்றும் நகைகளின் ஏற்றுமதியில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டதே இதற்கு காரணம் ஆகும்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த மே மாதத்தில், 2.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது, 67.39 சதவீதம் உயர்வாகும். கடந்த ஆண்டு மே மாதத்தில் ஏற்றுமதி, 1.40 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே மேற்கொள்ளப்பட்டிருந்தது.கடந்த மே மாதத்தில் ஏற்றுமதி மட்டுமின்றி, இறக்குமதியும் அதிகரித்துள்ளது.

அதுபோல், மே மாதத்தில் இந்தியாவின் இறக்குமதி 3 ஆயிரத்து 853 கோடி டாலராக இருந்தது. இது, 68.54 சதவீத வளர்ச்சி ஆகும். அதனால், மே மாதத்தில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 632 கோடி டாலராக இருந்தது. கடந்த மே மாதத்தில், இறக்குமதியை பொறுத்தவரை, கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்