மராட்டியத்தில் 5 பிரிவுகளாக ஊரடங்கு தளர்வுகள்; திங்கள் கிழமை முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி

மரட்டியத்தில் தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியதையடுத்து ஊரடங்கை படிப்படியாக தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2021-06-05 06:38 GMT
மும்பை,

நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமான மராட்டியத்தில் தற்போது கொரோனா மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டி திணறடித்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு சராசரியாக 15 ஆயிரம் என்ற அளவில் நீடிக்கிறது.  தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியதையடுத்து  ஊரடங்கை படிப்படியாக தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

இதன்படி, மராட்டியத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் மற்றும் ஆக்சிஜன் படுக்கை இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவு வரும் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. 

லெவல்-1 கட்டுப்பாடு தளர்வுகளில் மிகக்குறைந்த அளவே  கட்டுப்பாடுகள் இருக்கும். லெவல் -5 தளர்வுகளில் அதிகபட்சமாக  கட்டுப்பாடுகள்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 தொற்று பாதிப்பு 5 சதவீதத்திற்கு கீழும் ஆக்சிஜன் படுக்கைகள் 25 சதவீதத்திற்குள்ளும் நிரம்பியிருந்தால்  லெவல் 1 ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும். லெவல் 1 ஊரடங்கு தளர்வுகளில் அனைத்து வித கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்படும். தியேட்டர்கள், வணிக வளாகங்களும் திறக்க அனுமதி உண்டு. புறநகர் ரெயில்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்படும்.  சலூன்கள், உடற்பயிற்சி கூடங்கள் இயங்கலாம். 

லெவல் -2  ஊரடங்கு தளர்வுகள்;  தொற்று பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் இருந்து, ஆக்சிஜன் படுக்கைகள் 25-40 சதவீதம் நிரம்பியிருந்தால் லெவல் 2 கட்டுப்படுகள் பின்பற்றப்படும். இதன்படி, தியேட்டர்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். புற நகர் ரெயில்களில் மெடிக்கல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பயணிக்க வேண்டும். 

லெவல் 3:  தொற்று பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவிகிதமாக இருந்தால் அல்லது 40 சதவீத ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியிருந்தால் லெவல் 3 கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும். இதன்படி, மால்கள் திறக்க அனுமதி இல்லை. கடைகள் 4 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்படும். 

லெவல்4:  அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க அனுமதி உண்டு. 4 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும். உணவு விடுதிகள் ஹோம் டெலிவரி மட்டுமே செய்யலாம்.  விதி விலக்குகள் அளிக்கப்பட்ட தனியார் அலுவலகங்கள் மட்டுமே இயங்கலாம். திருமணத்தில் 25 நபர்களுக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது. இறுதிச்சடங்குகளில் 20 பேர் பங்கேற்கலாம். 

லெவல்5:  முழு ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும். அத்தியாவசிய கடைகள் 4 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி உண்டு. 

மேலும் செய்திகள்