டெல்லிக்கு படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் - கொரோனா 3-வது அலைக்கு வாய்ப்பு
டெல்லியில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. டெல்லியில் நேற்று 381 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து டெல்லியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சந்தை மற்றும் வணிகவளாகங்களில் உள்ள கடைகள் சுழற்சி முறையில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மெர்டோ ரெயில் சேவை 50 சதவிகித பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டிட பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் 50 சதவிகித ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா குறைந்ததால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் டெல்லிக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி டெல்லிக்கு வரத்தொடங்கியுள்ளனர்.
சாலை வழியாக பீகார், உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்து வருவதால் டெல்லியில் கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், டெல்லி மக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.