பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பி.எம்.கேர்ஸ் நிதி திட்டம்: நடைமுறை விதிகளை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கூடுதல் அவகாசம்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமர் அறிவித்த பி.எம்.கேர்ஸ் நிதி திட்டத்தை அளிப்பது தொடர்பான நடைமுறை விதிகளை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.;
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை, அங்குள்ள வசதிகள் உள்ளிட்டவை குறித்து தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமர் அறிவித்த பி.எம்.கேர்ஸ் நிதி திட்டத்தை அளிப்பது தொடர்பான நடைமுறை விதிகளை உருவாக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசித்து வருகிறது. எனவே இதுதொடர்பாக அறிக்கை அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரினார்.
அதை ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பான நடைமுறை விதிகள் குறித்த அறிக்கையை அளிக்க மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் வழங்கினர்.
இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் கவுரவ் அகர்வால், பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிவதில் தமிழகம் தவிர பிற மாநிலங்கள் திருப்தி அளிக்கும் வகையில் செயலாற்றி வருகின்றன. கொரோனாவால் பெற்றோரை, தாய் அல்லது தந்தையை இறந்த குழந்தைகளை மட்டும் தமிழகம் கண்டறிந்து வருகிறது. இந்த அணுகுமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளையும் கண்டறிவதில் பயன்தராது என நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று விகிதம் அதிகம் என்பதை புரிந்துகொள்கிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து உரிய உதவிகளை அளித்திட குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆகியவற்றை முடுக்கிவிட வேண்டும் என அறிவுறுத்தினர்.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் அரிஸ்டாட்டில் ஜோசப், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. கல்லூரி இளம்நிலை படிப்பு வரை கல்விச்செலவையும் அரசு ஏற்றுள்ளது என்றார்.
அதற்கு நீதிபதிகள், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண்பதை விரைவுபடுத்தவும், அவர்களை குழந்தைகள் நலக் குழுவிடம் 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்தவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்துமாறும், அப்போதுதான் அவர்களுக்கான நலத் திட்டத்தை செயல்படுத்தமுடியும் என்றும் வக்கீல் அரிஸ்டாட்டில் ஜோசப்பிடம் வலியுறுத்தி னர்.
இந்த வழக்கில் விரிவான உத்தரவு செவ்வாய்க்கிழமைக்குள் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்து, வழக்கு விசாரணையை ஜூலை 3-வது வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.