6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் திட்டம்; மத்திய அரசு தொடங்கியது

6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Update: 2021-06-11 20:36 GMT
பள்ளியில் சேர்ப்பு

மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நாட்டின் ஒவ்வொரு குழந்தையின் மீதும் அக்கறை செலுத்துவதுதான் மத்திய அரசின் முன்னுரிமை பணி. எனவே, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பற்றிய 
விவரங்களை ‘பிரபந்த்’ இணையதளத்தில் தொகுக்க ஆன்லைன் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தால், அவர்களது கற்றல் இடைவெளியை சரிசெய்ய சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பிறகு அவர்கள் பள்ளியில் சேர்த்து விடப்படுவார்கள். இதற்காக ‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திறந்தவெளி கல்வி
பள்ளி செல்லாதவர்கள் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக, சமூக, பொருளாதாரரீதியாக நலிந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் முதல் முறையாக மத்திய அரசு நிதியுதவி வழங்கும். அதைப் பயன்படுத்தி, அவர்கள் திறந்தவெளி கல்விமுறையிலோ அல்லது தொலைத்தொடர்பு கல்விமுறையிலோ சேர்ந்து படிப்பை தொடரலாம். பள்ளி செல்லா குழந்தைகள் விவரத்தை ஒவ்வொரு வட்டார அளவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்தகவல்களை மாவட்ட கலெக்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளின் கல்வித்துறை செயலாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

மேலும் செய்திகள்