மும்பையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து மாயமான கார்- வீடியோ

மும்பையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து, சில நிமிடங்களிலேயே தண்ணீருக்குள் மூழ்கி மறைந்துவிட்டது.

Update: 2021-06-14 08:43 GMT
மும்பை: 

மராட்டிய மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாநிலங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை பருவமழை தொடங்கியது. முதல் நாள் கொட்டி தீர்த்த மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. மேலும் மால்வாணியில் கட்டிடம் இடிந்து 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல வியாழக்கிழமை பெய்த மழைக்கு தகிசரில் வீடு இடிந்து 26 வயது பெண் உயிரிழந்தார். இந்தநிலையில் நகரில் 4-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. காலை முதலே மழை இடைவிடாமல் வெளுத்து கட்டியது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது. சாலைகளிலும் தண்டவாளங்களிலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மும்பையின் காட்கோபர் பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, அங்கே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து, சில நிமிடங்களிலேயே தண்ணீருக்குள் மூழ்கி மறைந்துவிட்டது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

சிறு பள்ளமாகத் தோன்றினாலும், ஒரு காரே மூழ்கி, சிறிது நிமிடத்தில் அந்த பள்ளத்துக்குள் ஒரு கார் இருப்பதே தெரியாத வகையில் முற்றிலும் மறைந்தே போனது இந்த வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்