இத்தாலிய கப்பல் பாதுகாப்பு வீரர்களுக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்துவைத்தது

இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் இத்தாலிய கப்பல் பாதுகாப்பு வீரர்களுக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்துவைத்தது.

Update: 2021-06-16 00:10 GMT
மீனவர்கள் கொலை வழக்கு
கேரள கடல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர் அஜஸ்பிங்க், கேரள மீனவர் ஜெலஸ்டின் ஆகியோர், அவ்வழியாக வந்த தனியார் நிறுவன சரக்கு கப்பலின் இத்தாலிய பாதுகாப்பு வீரர்கள் மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே ஆகியோரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 2 இத்தாலி வீரர்களும் 2013-ம் ஆண்டு சிறை விடுப்பில் சொந்த நாடு செல்ல 
அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் அவர்களை திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்க இத்தாலி அரசு மறுத்துவிட்டது. இந்திய சட்டங்களின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரி சர்வதேச கோர்ட்டையும் நாடியது.

சர்வதேச கோர்ட்டு தீர்ப்பு
அவர்கள் மீது இந்தியா சட்ட நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்குப்பெற முடியும் என்று சர்வதேச கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் இந்திய தரப்புக்கு இழப்பீடு பெறுவதற்கு உரிமை உள்ளது என நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள பெர்மனென்ட் கோர்ட் ஆப் ஆர்பிட்ரேஷன் தெரிவித்தது.இத்தாலிய வீரர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முடியாது என்று சர்வதேச கோர்ட்டு தெரிவித்திருந்தாலும், அவர்கள் இதை கொலை வழக்காக இத்தாலிய சட்டங்களின்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியது.

மத்திய அரசுக்கு உத்தரவு
இதற்கிடையே மாசிமிலியானே லாத்தோரே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இத்தாலிய வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு அந்நாட்டு அரசு வழங்கிய ரூ.10 கோடி இழப்பீட்டுத் 
தொகையை கோர்ட்டில் செலுத்த மத்திய அரசுக்கு கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டது.இந்த நிலையில், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

முடித்துவைப்பு
இந்திய மீனவர்களுக்கு இத்தாலி வழங்கிய ரூ.10 கோடி இழப்பீடு திருப்தி அளிக்கிறது. இத்தாலிய பாதுகாப்பு படை வீரர்கள் மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே ஆகியோருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டில் செலுத்தப்பட்ட ரூ.10 கோடி இழப்பீட்டுத் தொகையை கேரள ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்துக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். அதில் தலா ரூ.4 கோடியை இந்திய மீனவர்களின் இரு குடும்பங்களுக்கும், மீதமுள்ள ரூ.2 கோடியை காயமடைந்த படகு உரிமையாளருக்கும் வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாரிசுகளுக்கு பிரித்து அளிப்பதை உறுதி செய்ய உரிய உத்தரவைப் பிறப்பிக்க நீதிபதியை கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்