மராட்டிய மாநிலத்தில் சிவசேனா, பா.ஜனதாவினர் மோதலால் பரபரப்பு

மராட்டிய மாநிலம் சிந்துதுர்க்கில் சிவசேனா, பா.ஜனதாவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-19 23:48 GMT
மும்பை, 

சிவசேனா ராமர் கோவில் கட்டும் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டியது. இதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜனதாவினர் மும்பை தாதரில் உள்ள சிவசேனா பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜனதாவினர், சிவசேனா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்தநிலையில் சிவசேனா நிறுவன நாள் கொண்டாட்டம் சிந்துதுர்க் மாவட்டம் குடல் பகுதியில் நடந்தது. இதில் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அப்பகுதி சிவசேனா எம்.எல்.ஏ. வைபவ் நாயக் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பா.ஜனதா எம்.பி. நாராயண் ரானேவுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கிற்கு எரிபொருள் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளுக்கு பணம் கொடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து பா.ஜனதாவை சேர்ந்த நாராயண் எம்.பி.யின் ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வைபவ் நாயக் எம்.பி.க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதன் காரணமாக சிவசேனா, பா.ஜனதாவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. தகவல் அறிந்து சென்ற போலீசார் 2 கட்சியினரையும் அங்கு இருந்து கலைந்து போக செய்தனர்.

இதையடுத்து சிவசேனா எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் வேறு பெட்ரோல் பங்கிற்கு சென்று அதே நிகழ்ச்சியை நடத்தினர். இந்தநிலையில் போலீசார் சம்பவம் குறித்து மோதலில் ஈடுபட்ட சிவசேனா எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள், பா.ஜனதாவினர் சுமார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்