பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து, கைகளை கட்டி, நீரில் அமுக்கி குடும்பத்தினரை கொன்ற வாலிபர்

மேற்கு வங்காளத்தில் 4 மாதங்களுக்கு முன் பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்து, கைகளை கட்டி, நீரில் அமுக்கி கொன்று, குடோனில் குடும்பத்தினரை புதைத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2021-06-20 07:42 GMT

மால்டா,


மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் குருதோலா கிராமத்தில் காம்பவுண்டு குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ஆசிப் முகமது (வயது 19).  இந்நிலையில், இவரது மூத்த சகோதரர் ஆரிப் அவரது குடும்பத்தினரை காணவில்லை என காலியாசக் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றிய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.  ஆசிப் முகமது, தனது தந்தை, தாய், சகோதரி மற்றும் பாட்டி என 4 பேருக்கும் தூக்க மாத்திரை கலந்த பழச்சாறை கொடுத்து உள்ளார்.

அதன்பின்னர் அவர்கள் தப்பி விட கூடாது என்பதற்காக கை, கால்களை டேப் கொண்டு கட்டியுள்ளார்.  பின்பு அவர்கள் 4 பேரையும் குடோனுக்கு கொண்டு சென்றுள்ளார்.  ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த செயற்கை குளம் ஒன்றில் அவர்களை நீரில் மூழ்க செய்து கொலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரின் உடல்களை குடோனிலேயே புதைத்துள்ளார்.  சம்பவம் பற்றி அறிந்து போலீசார் நேற்று காலை குடோனில் சென்று 4 உடல்களையும் வெளியே எடுத்தனர்.

தொடர் விசாரணையில், லேப்டாப், மொபைல் போன், சிம் கார்டுகள், சி.சி.டி.வி. கேமிராக்கள் மற்றும் பிற உபகரணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

ஆசிப் சிறிய அளவிலான வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததுடன், சில நேரங்களில் வாகன ஓட்டுனராகவும் இருந்துள்ளார்.  இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் பற்றி அறிந்ததும் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அங்கே திரண்டனர்.  மேற்கு வங்காள மாநில மந்திரி சபீனா யாஸ்மினும் அந்த பகுதிக்கு சென்று நடந்த விசயங்களை பற்றி கேட்டு அறிந்து கொண்டார்.



மேலும் செய்திகள்