பெண்ணை கடத்திச்சென்று திருமணம்: மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் கைது

பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்ய முயற்சி செய்ததாக, மதமாற்ற தடை சட்டத்தில் குஜராத் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-20 23:31 GMT
கோப்புப்படம்
ஆமதாபாத், 

குஜராத்தில், திருமணம் செய்வதற்காக கட்டாயப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்வதை தடை செய்யும் குஜராத் மத சுதந்திர திருத்த சட்டம் கடந்த 15-ந் தேதி அமலுக்கு வந்தது. ஒரு வாரத்துக்குள் அந்த சட்டத்தின்கீழ் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அவர் பெயர் இம்ரான் அன்சாரி (வயது 23). குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தை சேர்ந்தவர். அதே மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை அவர் கடத்திச் சென்றதாக தெரிகிறது. அவரை தனது மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதுடன், திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தினார். இதற்கிடையே, மகளை காணவில்லை என்று இளம்பெண்ணின் தாயார் அளித்த புகாரை போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னலை வைத்து ஆராயந்ததில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் இம்ரான் அன்சாரியும், இளம்பெண்ணும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் அங்கு சென்று இருவரையும் கூட்டி வந்து விசாரணை நடத்தினர். தன்னை மதம் மாறவும், திருமணம் செய்யுவும் வாலிபர் கட்டாயப்படுத்துவதாக இளம்பெண் தெரிவித்தார். அதன்பேரில், மதமாற்ற தடை சட்டத்தின்கீழ் இம்ரான் அன்சாரியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்