கர்நாடகத்தில் உள்ள வேளாண் கல்லூரி படிப்புகளில் விவசாயிகளின் வாரிசுகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: மந்திரி பசவராஜ் பொம்மை

கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டம்-போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

Update: 2021-06-22 15:30 GMT

கர்நாடகத்தில் உள்ள வேளாண் கல்லூரி படிப்புகளில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டு அளவை 50 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண் கல்லூரிகளில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். கர்நாடகத்தில் உலக வங்கியின் உதவியுடன் 58 அணைக்கட்டுகள் ரூ.1,500 கோடி செலவில் புனரமைக்கப்படும். இதில் மாநில அரசின் பங்கு ரூ.450 கோடியாக இருக்கும். இதற்கு முன்பு துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அதே போல் குப்பைகளை அள்ள பயன்படுத்தப்படும் ஆட்டோக்களின் டிரைவர்கள் மற்றும் குப்பைகளை கையாளுபவர்களையும் பணி நிரந்தரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,000 பேர் பயன் பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒன்னாளி தாலுகாவில் 94 ஏரிகளை நிரப்ப ரூ.415 கோடியில் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்