மும்பை: முக கவசம் அணியாததற்காக ரூ.58 கோடி அபராதம் வசூல்

மராட்டியத்தின் மும்பை நகரில் கொரோனா காலத்தில் முக கவசம் அணியாததற்காக ரூ.58 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-06-24 09:51 GMT


மும்பை,

நாட்டில் கொரோனாவின் முதல் அலை மற்றும் 2வது அலையில் அதிகம் பாதிப்பிற்கு உள்ளானது மராட்டியம்.  இந்த மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.  இதேபோன்று சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிதல் ஆகியவற்றை கடைப்பிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

எனினும், தேவையின்றி வெளியே வாகனங்களில் செல்வது மற்றும் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாமல் இருப்பது ஆகிய மீறல்களில் பலர் ஈடுபட்டு உள்ளனர்.  இதற்காக அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து இதுவரை மும்பை நகரில் பொது இடங்களில் முக கவசம் அணியாத நபர்களுக்காக ரூ.58 கோடி வரை அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது என மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

இதுவரை ஜூன் 23ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மும்பை போலீசார் மற்றும் ரெயில்வே துறை என விதிமீறிய நபர்களிடம் இருந்து ரூ.58 கோடியே 42 லட்சத்து 99 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகளுக்காக இதுவரை 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  57 லட்சத்து 53 ஆயிரம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்