ஆன்மிக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அயோத்தியை தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும்

ஆன்மிக ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அயோத்தியை தலைசிறந்த நகரமாக மாற்ற வேண்டும் என்று ராமர் கோவில் ஆய்வு கூட்டத்தில் மோடி ஆலோசனை தெரிவித்தார்.

Update: 2021-06-27 01:14 GMT
புதுடெல்லி,

அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான கட்டப்பட்டு வருகிறது. அத்துடன் அயோத்தி நகர் முழுவதும் சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இந்த வளர்ச்சிப்பணிகளின் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நேற்று ஆய்வு நடத்தினார். டெல்லியில் இருந்து மெய்நிகர் முறையில் நடத்திய இந்த ஆய்வு கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அயோத்தி நகரத்தை ஆன்மிக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிறந்த நகரமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ஒவ்வொரு இந்தியரின் கலாசார நனவிலும் பொதிந்துள்ள ஒரு நகரமாக அயோத்தி விளங்கி வரும் நிலையில், இந்த நகரத்தின் மனித நெறிமுறைகள் எதிர்கால உள்கட்டமைப்புடன் பொருந்த வேண்டும். அயோத்தியின் வளர்ச்சி ஒரு ஆன்மிக மையமாகவும், உலகளாவிய சுற்றுலா தலமாகவும், ஒரு நிலையான ஸ்மார்ட் நகரமாகவும் கருதப்படுகிறது.

நமது மரபுகள் மற்றும் வளர்ச்சி மாற்றங்களில் மிகச்சிறந்ததாக அயோத்தியை வெளிப்படுத்த வேண்டும். தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது அயோத்திக்கு சென்று வரவேண்டும் என வருகிற தலைமுறைகள் உணரும் வகையில் அயோத்தி இருக்க வேண்டும்.

அயோத்தியில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் எதிர்வரும் காலங்களிலும் தொடரும். அதேநேரத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகரை முன்னேற்றுவதற்கான பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். அயோத்தியின் அடையாளத்தை கொண்டாடுவதும், புதுமையான வழிகள் மூலம் அதன் கலாசார தன்மையை உயிர்ப்புடன் வைத்திருப்பதும் அவசியம்.

ராமபிரான் மக்களை ஒன்றிணைக்கும் திறனை கொண்டிருந்தார். அதைப்போல அயோத்தியின் வளர்ச்சிப்பணிகள் அனைத்தும் பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்களின் பங்கேற்பு மனப்பான்மையால் வழிநடத்தப்பட வேண்டும். நகரின் இந்த வளர்ச்சியில் திறமையான இளைஞர்களின் திறன்களை பயன்படுத்த வேண்டும்.

அயோத்தி நகரைப்போல சரயு நதிக்கரை மற்றும் அதன் படித்துறைகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சரயு நதியில் கப்பல் போக்குவரத்தும் வழக்கமான அம்சங்களாக மாற்றப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த கூட்டத்தில், அயோத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடர்பாக உத்தரபிரதேச அதிகாரிகள் பிரதமரிடம் அறிக்கை ஒன்றை அளித்தனர். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட இருக்கும் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறிப்பாக விமான நிலையம், ரெயில்நிலைய விரிவாக்கம், பஸ் நிலையம் மற்றும் சாலைகள் மேம்பாடு குறித்து பிரதமருக்கு விவரிக்கப்பட்டது.

இதைப்போல அங்கு அமைய இருக்கும் பசுமை நகரம் பற்றி விவாதிக்கப்பட்டது. அதில் பக்தர்களுக்கான தங்குமிடங்கள், ஆசிரமங்கள், மடங்கள், ஓட்டல்கள், பல்வேறு மாநிலங்களின் அலுவலகங்கள் போன்றவையும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்