பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் மீது மேலும் ஒரு வழக்கு

இந்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுத்து டுவிட்டர் நிறுவனம் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.

Update: 2021-06-29 20:20 GMT
புதுடெல்லி,

மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை ஏற்காமல் ‘டுவிட்டர்’ முரண்டு பிடித்து வருகிறது. அந்நிறுவனத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. அதனால், சட்ட பாதுகாப்பை டுவிட்டர் இழந்தது. உத்தரபிரதேசத்தில் டுவிட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

3 நாட்களுக்கு முன்பு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்தின் ‘டுவிட்டர்’ கணக்கு சிறிது நேரம் முடக்கப்பட்டது. இதுபோன்ற மோதல்களுக்கு இடையே நேற்று  முன் தினம் ‘டுவிட்டர்’ இணையதளத்தில் இந்தியாவின் தவறான வரைபடம் வெளியானது. ‘கேரியர்’ என்ற பிரிவில் வெளியான அந்த வரைபடத்தில், காஷ்மீர், லடாக் ஆகியவை இந்தியாவுக்கு வெளியே இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. அதாவது, அவை இரண்டும் தனிநாடுகள் என்ற பொருளில் சித்தரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவின் தவறான வரைபடத்தை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. 

இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில்,  சிறார்களின் ஆபாச படம் பதிவிடப்படுவதாக டுவிட்டர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட பாதுகாப்பு அந்தஸ்தை இழந்த பிறகு டுவிட்டர் நிறுவனம் மீது பதியப்படும் நான்காவது வழக்கு இதுவாகும்.  போக்சோ மற்றும் ஐடி சட்டங்களின் கீழ் டுவிட்டர் நிறுவனம் மீது புதிய வழக்க்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.  

மேலும் செய்திகள்