அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓ.பி. சவுதாலா சிறையில் இருந்து விடுதலை

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓ.பி. சவுதாலா சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

Update: 2021-07-02 18:29 GMT
ஓ.பி.சவுதாலாவுக்கு தண்டனை
அரியானா மாநிலத்தில் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஓ.பி. சவுதாலா (வயது 86).இவர் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவர். முன்னாள் துணைப்பிரதமர் தேவிலால் மகன் ஆவார்.அரியானா மாநிலத்தில் நடந்த ஆசிரியர்கள் தேர்வு ஊழலில் சிக்கினார். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.இதே வழக்கில் சவுதாலா மகன் அஜய் சவுதாலாவும் மேலும் 53 பேரும் தண்டிக்கப்பட்டு வெவ்வேறு கால அளவில் சிறைவாசம் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

கொரோனாவால் சலுகை
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதாலா, தற்போது பரோலில் இருந்து வந்தார்.இந்த நிலையில், 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனாவையொட்டி 6 மாதம் சிறப்பு சலுகை வழங்கி டெல்லி அரசு கடந்த மாதம் உத்தரவிட்டது.சவுதாலா ஏற்கனவே 9 ஆண்டுகள், 9 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து விட்டதால் இந்த உத்தரவின் கீழ் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதி பெற்றார்.

விடுதலை ஆனார்
இந்த நிலையில், பரோலில் இருந்து வந்த சவுதாலா நேற்று டெல்லி திகார் சிறைக்கு சென்று விடுதலை தொடர்பான நடைமுறைகளை முடித்தார். இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதை டெல்லி சிறைத்துறை தலைமை இயக்குனர் சந்தீப் கோயல் உறுதி செய்தார்.

மேலும் செய்திகள்