ஆன்டிகுவா நாட்டில் இருந்து இந்தியாவுடன் கூட்டுச்சதி செய்து மெகுல் சோக்சி கடத்தப்பட்டரா? டோமினிக்கா பிரதமர் மறுப்பு

இந்தியாவுடன் கூட்டுச்சதி செய்து, ஆன்டிகுவா நாட்டில் இருந்து வைர வியாபாரி மெகுல் சோக்சியை டோமினிக்கா அரசு கடத்தவில்லை என்று அந்நாட்டு பிரதமர் மறுத்துள்ளார்.

Update: 2021-07-02 18:51 GMT
மெகுல் சோக்சி, டோமினிக்கா பிரதமர்
கடத்தப்பட்டாரா?
பஞ்சாப் நேஷனல் வங்கியை பயன்படுத்தி ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டுக்கு தப்பிச் சென்றார். அந்த நாட்டின் குடியுரிமை பெற்று தங்கி இருந்தார்.கடந்த மே மாத இறுதியில் அவர் அங்கிருந்து பக்கத்தில் உள்ள டோமினிக்காவுக்கு வந்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, அங்குள்ள கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, ஆன்டிகுவா நாட்டு குடியுரிமை பெற்றுள்ள மெகுல் சோக்சியை அந்த நாட்டில் வைத்து கைது செய்ய முடியாது என்பதால், இந்திய அரசின் வேண்டுகோளின் பேரில், டோமினிக்கா அரசு மெகுல் சோக்சியை தனது நாட்டுக்கு கடத்தி வந்து, கைது செய்ததாக டோமினிக்கா எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

அபத்தமானது
இந்தநிலையில், ஒரு டி.வி. சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்ற டோமினிக்கா பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட், இதை திட்டவட்டமாக மறுத்தார். 
அவர் கூறியதாவது:-

டோமினிக்கா அரசும், ஆன்டிகுவா அரசும் இந்திய அரசுடன் கூட்டுச்சதி செய்து மெகுல் சோக்சியை கடத்தின என்று சொல்வது முற்றிலும் அபத்தமானது. இதுபோன்ற வேலைகளை நாங்கள் செய்வது இல்லை. இதை திட்டவட்டமாக நிராகரிக்கிறேன். கோர்ட்டின் பிடியில் உள்ள ஒருவர் சொன்னதை வைத்து இப்படி பிரசாரம் செய்வது துரதிருஷ்டவசமானது.

கோர்ட்டு முடிவு செய்யும்
டோமினிக்காவில் உள்நாட்டு நபர் ஒருவர் ஒரு குற்றத்தை செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றால், அவரை அங்கே சுதந்திரமாக நடமாட விடுவது சரியா? அல்லது அவரை நாடு கடத்தி வந்து வழக்கை சந்திக்க வைப்பது சரியா? எனவே, மெகுல் சோக்சியை கைது செய்து கோர்ட்டின் முன்பு நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் டோமினிக்காவுக்கு இருக்கிறது. 
மற்றதை கோர்ட்டு முடிவு செய்யட்டும். மெகுல் சோக்சியின் உரிமைகள் மதிக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்