மராட்டியத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை அறிவிப்பு

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறையை மாநில அரசு அறிவித்து உள்ளது.

Update: 2021-07-03 19:54 GMT
அனைவரும் தேர்ச்சி
மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக 10, 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பல கட்ட ஆலோசனைக்கு பிறகு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறையை இறுதி செய்து உள்ளோம். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு எல்லா மாணவர்களையும் தேர்ச்சி செய்ய மாநில கல்வி வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

மதிப்பெண் கணக்கிடும் முறை

மாணவர்கள் 11, 12 மற்றும் 10 வகுப்பு பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மதிப்பெண் கணக்கிடப்பட உள்ளது. 12-ம் வகுப்பு பருவ, செய்முறை, அலகு தேர்வு மதிப்பெண்களை வைத்து 40 சதவீதமும், 11-ம் வகுப்பு இறுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி 30 சதவீதமும், 10-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி 30 சதவீதமும் சேர்த்து மொத்த மதிப்பெண் கணக்கிடப்படும்.

இதில் மதிப்பெண் குறைந்ததாக கருதும் மாணவர்கள், கூடுதல் மதிப்பெண் பெற கல்வி வாரியம் நடத்தும் 2 தேர்வுகளை எழுதலாம். ஒவ்வொரு கல்வி நிலையத்திற்கும் கல்லூரி முதல்வர் மற்றும் 6 ஆசிரியர் அடங்கிய கமிட்டி தேர்வு மதிப்பெண் கணக்கிட அமைக்கப்படும். ஆசிரியர் மதிப்பெண் கணக்கீடும் பணியை சிறப்பாக செய்வார்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்