மோடி, நிதிஷ்குமார் அரசுகளை விமர்சித்த லாலு பிரசாத்

லாலு பிரசாத் யாதவ், நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களிடையே அரசியல் பேசினார். அவர் மோடி, நிதிஷ்குமார் அரசுகளை விமர்சித்தார்.

Update: 2021-07-05 20:14 GMT
டெல்லியில் ஓய்வு
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ், கால்நடைத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்றார். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.உடல்நல குறைவு காரணமாக, ராஞ்சியிலும், பின்னர் டெல்லியிலும் அவர் சிகிச்சை பெற்றார். ஜாமீன் கிடைத்ததால் சில மாதங்களுக்கு முன்பு விடுதலை ஆனார். இருப்பினும், பீகாருக்கு திரும்பாமல், டெல்லியில் உள்ள தன் மகள் மிசா பாரதி எம்.பி.யின் இல்லத்தில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார்.

காணொலியில் பேச்சு
இந்தநிலையில், ராஷ்டிரீய ஜனதாதளத்தின் வெள்ளிவிழா ஆண்டு நேற்று தொடங்கியது. இதையொட்டி, டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் லாலுபிரசாத் யாதவ் பேசினார். அவரது பேச்சை பீகாரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும், இதர இடங்களிலும் தொண்டர்கள் பார்த்தனர். லாலுபிரசாத் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆற்றிய அரசியல் உரை இதுவே ஆகும். 
அவர் அவ்வப்போது தடுமாற்றத்துடன் பேசினார். 

அவர் பேசியதாவது:-
மத்திய அரசின் தவறான கொள்கைகளால் நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு, கொரோனா ஆகியவற்றால் பொருளாதார சிக்கல் உருவாகி இருக்கிறது. பிரதமர் மோடி 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக சொன்னார். ஆனால் அதை நிறைவேற்றவில்லை. ரெயில்வே, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள் 
அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன.

விரைவில் பீகார் செல்வேன்
அதுபோல், பீகாரில் நிதி்ஷ்குமார் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடக்கிறது. தினமும் 4 கொலை நடக்கிறது. வேலைவாய்ப்பு இ்ல்லாததால், லட்சக்கணக்கானோர் புலம்பெயர் தொழிலாளர்களாகி விட்டனர். ராஷ்டிரீய ஜனதாதளம் என்ற படகை என் மகன் தேஜஸ்வி யாதவ் சிறப்பாக இயக்கி வருகிறார். கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. என் மனைவியும், தேஜஸ்வி யாதவும் இல்லாவிட்டால், நான் ராஞ்சியிலேயே இறந்திருப்பேன். அதுபோல், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்களும் என்னை நன்றாக கவனித்தனர். விரைவில் குணமடைந்து நான் பீகாருக்கு வருவேன். பாட்னா மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்