இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த விமானத்தில் திடீர் கோளாறு: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கம்

பாதி வழியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்த விமானம் அவசர, அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2021-07-08 01:35 GMT
விமானத்தில் கோளாறு
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு லண்டனில் இருந்து கொழும்புவிற்கு நேற்று முன்தினம் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் விமானத்தில் புறப்பட்டனர். விமானத்தில் இலங்கை அணியை சேர்ந்தவர்கள் உள்பட 43 பேர் பயணம் செய்தனர்.புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானிகள் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து அந்த விமானத்தை உடனடியாக மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறக்க கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு அனுமதி கேட்டனர்.

திருவனந்தபுரத்தில் தரையிறக்கம்
ஆனால் அங்கு காலநிலை மோசமாக இருந்ததால் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அந்த விமானம் வேறு வழியின்றி கொழும்பு நோக்கி பறந்தது. இதனிடையே விமானத்தில் எரி பொருள் குறைந்து வருவதை அறிந்த விமானி, விமானத்தை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தார். தொடர்ந்து அங்குள்ள கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட போது, அனுமதி கிடைத்தது. அதன்படி மதியம் 1.30 மணிக்கு அவசர, அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

அப்போது தான் வீரர்களுக்கே நடந்த சம்பவம் குறித்து தெரிய வந்தது. ஆனால் வீரர்கள் யாரும் விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்கப்படவில்லை. பின்னர் எரிபொருள் நிரப்பப்பட்டு, தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் அந்த விமானம் சுமார் 3 மணியளவில் மீண்டும் புறப்பட்டு சென்றது. ரகசியமாக வைக்கப்பட்ட இந்த தகவல் நேற்று காலை தான் தெரியவந்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்த மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்