விலைவாசி உயர்வு பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் - ப.சிதம்பரம் பேட்டி

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பிரச்சினையை எழுப்புவோம். மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டு வியூகம் வகுக்கப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

Update: 2021-07-14 02:19 GMT
புதுடெல்லி, 

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சில்லரை பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு பிரச்சினையை கண்டு கொள்ளாமல்விட்டால், அது தானாகவே தீர்ந்து விடும் என்று மத்திய அரசு கருதுகிறது. இந்த அலட்சிய போக்கை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

தேவை அதிகரித்ததாலோ அல்லது மக்களிடம் அதிகமாக பணம் புழங்குவதாலோ இந்த விலைவாசி உயர்வு ஏற்படவில்லை. மத்திய அரசின் தவறான கொள்கைகளும், திறமையற்ற பொருளாதார நிர்வாகமும் தான் இதற்கு காரணங்கள்.

மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை கணிசமாக குறைக்க வேண்டும். இறக்குமதி வரியை குறைத்து, இறக்குமதி பொருட்களின் விலை குறைய வழிவகுக்க வேண்டும். மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்தான் விலைவாசி உயர்வு பிரச்சினையில் இருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், காங்கிரஸ் கட்சி விலைவாசி உயர்வு பிரச்சினையை எழுப்பும். அதுகுறித்து முழு விவாதம் நடத்துமாறு கோருவோம். மற்ற கட்சிகளும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதுதொடர்பாக கூட்டு வியூகம் வகுக்கப்படும் என்று நம்புகிறோம்.

விலைவாசி உயர்வு இல்லை என்று நடித்துக்கொண்டிருந்தால், விலைவாசி உயர்வு போய்விடாது என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன். சாதாரண காலங்களிலேயே விலைவாசி உயர்வு தாங்க முடியாது.

வேலைகளை இழந்து, சம்பளம் குறைக்கப்பட்ட நிலையில் மக்கள் தவிக்கும்போது, இந்த விலைவாசி உயர்வு அவர்களது முதுகெலும்பை முறித்துள்ளது. இதற்கு மோடி அரசே நேரடி பொறுப்பு.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

மேலும் செய்திகள்