கான்வர் யாத்திரைக்கு அனுமதி: உத்தரபிரதேச அரசு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

கான்வர் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, உத்தரபிரதேச அரசு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2021-07-15 00:01 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத்திரை’ நடைபெறும். இந்த யாத்திரையை மேற்கொள்ளும் சிவபக்தர்கள் ‘கன்வாரியாக்கள்’ என்று அழைக்கப்படுவர். இந்த யாத்திரையின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தளங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்துச் செல்வார்கள். 

அவ்வாறு எடுக்கப்பட்ட கங்கை நீரை தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் நடத்துவார்கள். இந்த யாத்திரைக்குப் பெயர் கன்வர் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டும் கன்வர் யாத்திரை நடத்துவதற்கு உத்தரபிரதேச அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதையடுத்து உத்தரகாண்ட் மாநில அரசு இது குறித்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த ஆண்டு கன்வர் யாத்திரையை தடை செய்வதாக அறிவித்தார். கொரோனா 3வது அலை பரவல் அபாயம் மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்கள் இருப்பதால் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுவதாகவும், பக்கத்து மாநிலங்களில் இருந்து காவல்துறை அனுமதியும் லாரிகளில் கங்கை நீரை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கான்வர் யாத்திரைக்கு அனுமதி விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு, மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகை செய்தியை அடிப்படையாகக் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. 

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஆர்.எப். நரிமன் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. ஜூலை 25 முதல் ஆகஸ்டு 6 வரை கான்வர் யாத்திரைக்கு உத்தரபிரதேச அரசு அனுமதி அளித்த விவகாரம் தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உத்தரபிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிடுகிறோம், வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். கொரோனா 3-வது அலையை கருத்தில் கொண்டு கான்வர் யாத்திரையை உத்தரகாண்ட் அரசு ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்