காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் உள்ளிட்ட 3 பேர் பலி

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்ட்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்து வந்த மர்மப்பொருள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதால் அது திரும்பிச் சென்றுவிட்டது.

Update: 2021-07-15 01:02 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் புல்வாமா நகரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு நேற்று பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனர். அதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான அய்ஜாஸ் என்ற அபு ஹுரைரா, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டராக செயல்பட்டவர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்கவுண்ட்டரை அடுத்து, குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீரில் தாக்குதலுக்கும், ஆயுத வினியோகத்துக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் டிரோன்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு படையினர் விழிப்புடன் கண்காணித்து வருகின்றனர். காஷ்மீரில், குறிப்பாக எல்லைப்புற மாவட்டங்களில் டிரோன்களுக்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஆர்னியா பகுதியில் சர்வதேச எல்லையை ஒட்டி சுமார் 200 அடி உயரத்தில் விட்டுவிட்டு ஒளிர்ந்த சிவப்பு விளக்குடன் ஒரு மர்மப்பொருள் பறந்துவந்தது.

உடனே சுதாரித்த எல்லை பாதுகாப்பு படையினர், அந்த பொருளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே அது பாகிஸ்தான் பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிட்டது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2-ந் தேதியும் இதேபோல ஒரு டிரோன் பாகிஸ்தானில் இருந்து இப்பகுதிக்கு பறந்து வந்ததும், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் அது திரும்பிச் சென்றுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்