செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர்: தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் ‘நீட்’ தேர்வு மையங்கள்

தமிழகத்தில் செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் என மேலும் 4 நகரங்களில் ‘நீட்’ தேர்வு மையங்கள் அமைக்கப்படுவதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

Update: 2021-07-16 00:44 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் ‘நீட்’ என்னும் பொது நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படுகிறது.

ஆனால் இந்த ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு உள்ள நிலையில், அதில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை எழுந்த வண்ணம் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 12-ந்தேதி நடைபெற இருக்கிறது.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் ‘நீட்' தேர்வு நடைபெற இருக்கிறதால், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், தேர்வு நடைபெறும் நகரங்களும், அங்குள்ள மையங்களும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

கடந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு 155 நகரங்களில் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 198 நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே நாடு முழுவதும் இந்த தேர்வு 3 ஆயிரத்து 862 தேர்வு மையங்களில் நடந்தது. அதுவும் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட உள்ளது.

இந்த வகையில், தமிழகத்தில் கூடுதலாக 4 நகரங்களில் ‘நீட்’ தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தன்னுடைய ‘டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

‘நீட்’ தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் என்னை சந்தித்தார். அவரிடம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளின் பின்னணி குறித்து விளக்கப்பட்டது.

மேலும் ஏற்கனவே தமிழ் உள்பட 11 மொழிகளில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக மலையாளம், பஞ்சாபி என 2 மொழிகள் சேர்க்கப்பட்டு, 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது என்பதையும் அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

மேலும் 4 நகரங்களில்தேர்வு மையங்கள்

தமிழக மாணவர்களின் வசதிக்காக செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 4 நகரங்களில் ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கு சேர்க்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 14 நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் தற்போது 18 நகரங்களில் நடக்க இருக்கிறது. இதேபோல், தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்