தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்துவது தொடர்பாக போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் - மராட்டிய முதல் மந்திரி அறிவுறுத்தல்

படப்பிடிப்புகள் நடத்துவது தொடர்பாக போலீசாருக்கு தயாரிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-07-18 00:18 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மாலை 4 மணி வரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சினிமா பட தயாரிப்பாளர்களிடம் காணொலி காட்சி மூலம் பேசினார். 

அப்போது, மாலை 4 மணிக்கு பிறகும் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் முதல்-மந்திரியிடம் கோரிக்கை வைத்தனர். மேலும் அரசின் கொரோனா தடுப்பு விதிகளை அனைத்தையும் பின்பற்றுவதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து தயாரிப்பாளர்களின் கோரிக்கை குறித்து முதல்-மந்திரி கூறுகையில், “கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ள மாநிலங்களில் மராட்டியமும் ஒன்று. கொரோனா வைரஸ் பரவல் இருக்கிறது. மக்களின் நலன் தான் முக்கியம் என்பதால் தளர்வுகள் அறிவிப்பதில் அரசு மிகவும் கவனமாக உள்ளது. 

மும்பை போலீசார் படப்பிடிப்பு தளம் மற்றும் நேரம் தொடர்பான விவரங்களை கேட்பார்கள். படப்பிடிப்பு தளத்தில் விதிகள் பின்பற்றபடுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். பட தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு நடத்துவது தொடர்பாக போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்