மும்பையில் கொரோனா பரவல் வேகம் குறைந்து உள்ளதால், பொதுமக்களையும் மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்: ராஜ் தாக்கரே

பொதுமக்களையும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2021-07-22 23:39 GMT
பொதுமக்கள் பாதிப்பு
மும்பையில் கொரோனா பரவல் வேகம் குறைந்து உள்ளது. எனினும் பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே 
செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.இந்தநிலையில் மின்சார ரெயில்களில் செல்ல பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

மும்பையின் உயிர்நாடி
மும்பையில் பெரும்பாலான தொழில்கள் செயல்பட தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் எல்லோரும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலையில் இல்லை. இதன் காரணமாக பொதுமக்கள் பல மணி நேரம் பஸ்களில் பயணம் செய்து வேலைக்கு செல்கின்றனர். மின்சார ரெயில் மும்பையின் உயிர்நாடி. அதன் சேவை நிறுத்தப்பட்டு இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. பஸ்களில் கூட்டம் அலைமோதினாலும் சுலபமாக வைரஸ் பரவத்தான் செய்யும். எனவே பஸ்சை இயக்கிவிட்டு, ரெயில்சேவையை நிறுத்தி இருப்பது என்ன லாஜிக்? இதேபோல கொரோனா வைரஸ் உடனடியாக மறைந்துவிடப்போவதில்லை என முன்னணி நிபுணர்கள் கூறுகின்றனர்.

அனுமதிக்க வேண்டும்
எனவே நாம் வைரசுடன் வாழ்க்கையை தொடங்க வேண்டும். எனவே மாநில அரசு உடனடியாக பொதுமக்களை மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களையாவது அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்