கேரளாவில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்தும், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு சமீபத்தில் கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் இருந்தார்.

Update: 2021-07-24 21:08 GMT
இந்தநிலையில் மேலும் ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் இறந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கொல்லம் சாஸ்தாங்கோட்டையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31), லாரி டிரைவர். இவருக்கும், நகை கடையில் வேலை பார்த்து வந்த தன்யா தாஸ் (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.இந்த நிலையில் நேற்று வீட்டின் படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தன்யாதாஸ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சாஸ்தாங்கோட்டை போலீசார் தன்யாதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொல்லம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், வரதட்சணை கொடுமை காரணமாக தன்யாதாஸ் தற்கொலை செய்தது தெரியவந்தது.மேலும் தன்யா தாசின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதில், தன்னுடைய மகள் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்