இளைஞர்கள் முன்னேற்றத்துக்கு புதுவை அரசு துணை நிற்கும்: புதுச்சேரி கவர்னர்

இளைஞர்கள் முன்னேற்றத்துக்கு புதுவை அரசு துணை நிற்கும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2021-07-27 21:26 GMT
சிலைக்கு மாலை
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவு நாள் புதுவை அரசு சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி லாஸ்பேட்டை கோளரங்கத்தில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பின் மரக்கன்று நட்டனர்.

அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அப்துல்கலாமின் நினைவுநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன். தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டு ராமேசுவரத்தில் பிறந்து விண்வெளியின் நாயகனாக திகழ்ந்து உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து, ஜனாதிபதியாகவும் சிறப்பாக செயலாற்றிய அவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை அடைகிறேன்.

இளைஞர்கள் முன்னேற்றம்
அப்துல்கலாம் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர். குழந்தைகள் கல்வி கற்று மேன்மை அடைய அவரது ஆசீர்வாதம் என்றும் இருக்கும். அவர் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தார். அவரது வழியில் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு புதுவை அரசு துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்