6வது திருமணம் செய்ய முயன்ற முன்னாள் மந்திரி மீது 3வது மனைவி புகார்

திருமணம் ஆனதில் இருந்தே உடல், மனரீதியாக என்னை துன்புறுத்தினார் என முன்னாள் மந்திரியின் 3வது மனைவி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-08-03 08:11 GMT



லக்னோ,

உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல் மந்திரி மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆட்சியில், மந்திரியாக பதவி வகித்தவர் சவுத்ரி பஷீர்.  அக்கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

அதன்பின்னர் அந்த கட்சியில் இருந்தும் விலகினார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  இவரது 3வது மனைவி நக்மா, தனது கணவர் பஷீர் 6வது திருமணம் செய்ய முயன்ற விவரம் அறிந்து அவர் மீது போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அதில், சவுத்ரி பஷீருக்கு என்னையும் சேர்த்து ஏற்கனவே 5 மனைவிகள் உள்ளோம்.  கடந்த 2012ம் ஆண்டு பஷீரை திருமணம் செய்தேன். அப்போது இருந்தே உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தி வந்தார்.  பெண்களை துன்புறுத்துவதில் பஷீர் அலாதியான விருப்பம் உடையவர்.

இந்நிலையில் அவர், ஷாயிஸ்டா என்ற பெண்ணை 6வது திருமணம் செய்ய போகிறார் என சமீபத்தில் கேள்விப்பட்டேன். இது குறித்து அவரிடம் கேட்டபோது, என்னை அடித்து துன்புறுத்தினார். முத்தலாக் வாயிலாக என்னை விவாகரத்து செய்து வீட்டை விட்டு துரத்தினார் என தனது புகாரில் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்பு உரிமை சட்டம் 2019ன் பிரிவு 3 மற்றும் ஐ.பி.சி.யின் பிரிவு 504ன் கீழ் பஷீர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நக்மாவுக்கும், பஷீருக்கும் 2 மகன்கள் உள்ளனர்.  போலீசாரிடம் உதவி கோரி அவர் வீடியோ ஒன்றையும் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ளார்.



மேலும் செய்திகள்