மராட்டியத்தில் 790 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - மந்திரி யஷோமதி தாக்குர் தகவல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் மராட்டியத்தில் 790 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக மந்திரி யஷோமதி தாக்குர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-06 20:03 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே குழந்தைகள் திருமணத்தை தடுக்க மாநில அரசு விழிப்புணர்வு நிகழச்சியை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் முடிவடைகிறது.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி யாஷோமதி தாக்குர் கூறியதாவது:-

“ஊரடங்கின் போது பல்வேறு இடங்களில் குழந்தைகள் திருமணம் நடப்பதாக புகார்கள் வந்தது. 18 வயதுக்கு குறைந்த பெண்களுக்கு நடக்க இருந்த திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனா். 2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் சுமார் 790 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் திருமணம் குறித்து பொதுமக்கள் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.”

இவ்வாறு அவா் கூறினார்.

மராட்டியத்தில் ஊரடங்கின் போது, சோலாப்பூரில் 88, அவுரங்காபாத்தில் 62, உஸ்மனாபாத்தில் 45, நாந்தெட்டில் 45, யவத்மாலில் 42, பீட்டில் 40 குழந்தைகள் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்