ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிடம் பேசி, வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிடம் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-07 14:23 GMT
புதுடெல்லி, 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் இறுதி போட்டி இன்று நடந்தது.  இதில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 87.03 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து அசத்தினார்.  இதனால் டாப் 3 நபர்களில் அவர் முதல் இடத்திலும், 2வது இடத்தில் ஜூலியன் வெபர் மற்றும் 3வது இடத்தில் ஜாகுப் வாடிலெஜ் இருந்தனர்.  இதற்கடுத்த இடங்களில் பாகிஸ்தானின் நதீம் (82.40 மீ) மற்றும் பெலாரசின் மியாலேஷ்கா (82.28 மீ) ஆகியோர் இருந்தனர்.

தொடர்ந்து 2வது முயற்சியில் அவர் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து மீண்டும் அசத்தினார்.  தொடர்ந்து டாப் 3ல் முதல் இடமும், டாப் 8ல் முதல் இடமும் பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பினை நீரஜ் சோப்ரா உறுதி செய்துள்ளார்.  இதனால், போட்டியில் அவர் தங்க பதக்கம் பெறுவது உறுதியானது.

அவர் அதிக தொலைவுக்கு ஈட்டி எறிந்து மற்ற வீரர்களை பின்னுக்கு தள்ளினார்.  இந்த போட்டியில் அவரை வீழ்த்த மற்ற வீரர்களால் முடியவில்லை.  அவரது இலக்கை கடைசி வரை பிற வீரர்கள் முறியடிக்கவில்லை.  இதனால், இறுதி சுற்று வரை முதல் இடத்தில் நீடித்த நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று, தங்க பதக்கம் தட்டி சென்றார்.

அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், நீரஜ் சோப்ராவை தொடர்பு கொண்டு பேசினேன்.  தங்கம் வென்றதற்காக வாழ்த்துகளை தெரிவித்துள்ளேன்.  அவரது கடின உழைப்பு மற்றும் உறுதி தன்மை ஆகியவற்றுக்கு பாராட்டு தெரிவித்தேன்.  விளையாட்டு வீரரின் உறுதியுடன், தனது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.  அவரது வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்