டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய தலைவர் அமெரிக்காவிற்கு மாற்றம்
டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தின் இந்திய தலைவர் அமெரிக்காவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.;
புதுடெல்லி,
டுவிட்டர் சமூக வலைத்தள நிறுவனத்தின் இந்திய தலைவராக இருப்பவர் மணீஷ் மகேஸ்வரி. அவர் திடீரென அமெரிக்காவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்த மாற்றத்திற்கான காரணமாக டுவிட்டர் நிறுவனம் எந்த காரணத்தையும் வெளியிடவில்லை. “மணீஷ் மகேஸ்வரி அமெரிக்கா தலைமை அலுவலகத்தில் வருவாய், வியூகம் மற்றும் செயல்பாடுகள் பிரிவின் மூத்த இயக்குனராக இருந்து தனது புதிய பொறுப்பில், கவனம் செலுத்துவார்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு இது பதவி உயர்வு என்று கூறப்படுகிறது
ஜூன் மாதத்தில், சமூக வலைத்தளங்களில் ஒரு வெறுப்பு வீடியோ வெளியாகி வைரலானது. இது தொடர்பாக மகேஸ்வரி மற்றும் சிலருக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் டுவிட்டர் நிறுவனம் அதுபற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை.