ரூ.83 லட்சம் கோடி கடன் வாங்கியதே மோடியின் மிகப்பெரிய சாதனை: சித்தராமையா

கடந்த 6 ஆண்டுகால ஆட்சியில் ரூ.83 லட்சம் கோடி கடன் வாங்கியதே மோடியின் மிகப்பெரிய சாதனை என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-16 18:32 GMT
பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

ஆட்சி கவிழும்
மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பா.ஜனதா அரசு எந்த விதமான உதவியும் செய்து கொடுக்கவில்லை. மக்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக மக்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமலும், கையில் பணம் இல்லாமலும் செய்வது அறியாமல் திகைத்து வருகின்றனர். ஊரடங்கு சந்தர்ப்பத்தில் நான் முதல்-மந்திரியாக இருந்திருந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கொடுத்திருப்பேன்.எடியூரப்பாவும், அவரது மகனும் ஊழலில் ஈடுபடுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார்கள். மக்களுக்கு உதவி செய்ய பா.ஜனதாவினருக்கு மனம் இல்லை. பா.ஜனதாவினர் வாயில் இருந்து வருவது அனைத்தும் பொய். பொய்யை தவிர வேறு எதுவும் பேசுவதே இல்லை. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் ஆட்சியும் நீண்ட நாட்கள் நீடிக்க போவதில்லை. அவரது ஆட்சியும் எந்த நேரத்திலும் கவிழலாம். மக்களை ஏமாற்றியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.

மனசாட்சியே இல்லை
மாநிலத்தில் ஏழை மக்களின் நலனுக்காகவும், அவர்கள் 3 நேரமும் குறைந்த விலையில் சாப்பிட வேண்டும் என்பதற்காகவும் இந்திரா உணவகத்தை கொண்டு வந்தேன். அந்த உணவகத்தை மூடுவதற்காக அனைத்து நடவடிக்கையும் பா.ஜனதாவினர் எடுத்து வருகின்றனர். பா.ஜனதாவினருக்கு மனசாட்சியே இல்லை. சி.டி.ரவி, இந்திரா உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார். அன்னபூர்னேஷ்வரி என்று பெயர் வைக்க வேண்டும் என சொல்கிறார். சி.டி.ரவிக்கு வரலாறு பற்றியும் எதுவும் தெரியவில்லை.

ஏழை மக்களுக்கு இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்குவதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். அது அவரின் சொந்த பணமா?. மக்கள் வரிப்பணத்தில் இருந்து தானே கொடுகிறார்கள். மக்களிடம் இருந்து வரிப்பணத்தை பெற்று கொண்டு, நாங்கள் கொடுப்பதாக பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி உயர்ந்து கொண்டே சென்ற வண்ணம் இருக்கிறது. விலைவாசியை குறைக்க எந்த நடவடிக்கையும் மோடி எடுக்கவில்லை.

ரூ.83 லட்சம் கோடி கடன்

இதற்கு முன்பு ஒரு சாதாரண குடும்பத்திற்கு மாதம் ரூ.5 ஆயிரம் போதுமாக இருந்தது. தற்போது ரூ.11 ஆயிரம் தேவைப்படுகிறது. வேலை இல்லாமலும், உணவுக்காகவும் மக்கள் திண்டாடுகிறார்கள். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவின் கடன் ரூ.53 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது இந்தியாவின் கடன் ரூ.136 லட்சம் கோடியாக உள்ளது. இதன்மூலம் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.83 லட்சம் கோடியை கடனாக வாங்கி உள்ளது.

மோடியின் 6 ஆண்டுகாலத்தில் நடந்த மிகப்பெரிய சாதனை ரூ.83 லட்சம் கோடி கடன் வாங்கியது மட்டுமே. மக்கள் மீது வரியை திணிப்பது மட்டுமே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது. மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களிடம் 100 ரூபாயில், 75 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கார்ப்பரேட், பிற நிறுவனங்களிடம் இருந்து 25 ரூபாய் மட்டுமே முதலீடாக பெறுகிறார்கள். இது ஒன்றின் மூலமாகவே பா.ஜனதா அரசு யார்? பக்கம் உள்ளார்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்