கனடா நாட்டிற்கு நேரடி விமானம் இல்லாததால் 3 நாடுகளைக் கடந்து செல்ல வேண்டிய நிலை - பயணிகள் கவலை

கனடா நாட்டிற்கு நேரடி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெவ்வேறு இணைப்பு விமானங்களில் 3 நாடுகளைக் கடந்து கனடா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-21 16:45 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக ஏராளமானோர் கனடா செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக, கனடா செல்லும் நேரடி விமானம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கனடா செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். 

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து கனடா செல்ல வேண்டும் என்றால், முதலில் துபாய்க்கு செல்ல வேண்டும். அங்கிருந்து வேறொரு இணைப்பு விமானத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவிற்கு போக வேண்டும். பின்னர் அடுத்த விமானத்தில் மெக்சிகோ சென்று அங்கிருந்து மற்றொரு விமானம் மூலமாக கனடா செல்ல வேண்டும். இதனால் ரூ.1.5 லட்சத்தில் முடிய வேண்டிய பயண செலவு, ரூ.5 லட்சத்திற்கும் மேல் ஆகிறது. அதோடு நேர விரயமும், மன உளைச்சலும் சேர்ந்து சோர்வளிப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 3 நாடுகளை கடப்பது மட்டுமின்றி, 3-வது நாட்டில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் தான் கனடாவிற்கு விமானம் ஏற அனுமதிக்கப்படுகிறது. தொய்வை ஏற்படுத்தும் இத்தகைய கனடா பயணம் குறித்து பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பல்வேறு உலக நாடுகள் இந்தியாவில் இருந்து நேரடி விமான பயணத்தை மீண்டும் தொடங்கி இருப்பதைப் போல, கனடாவும் விரைவில் தொடங்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் செய்திகள்