உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்

Update: 2021-08-21 17:18 GMT
கோப்புப்படம்
லக்னோ, 

உடல்நலக்குறைவு காரணமாக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் (89) இன்று காலமானார். 

முன்னதாக கடந்த ஜூலை மாதம் அவருக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜூலை 4ஆம் தேதி முதல் அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரகக் கோளாறு, இதயக்கோளாறு, நரம்பியல் பிரச்சினை இருந்து வந்தநிலையில், உள் உறுப்புகள் செயலிழப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்யாண் சிங் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச மாநில முதல்-மந்திரியாக இருந்தார். மேலும் அவர் ராஜஸ்தான் மாநில கவர்னராகவும் இருந்துள்ளார். கல்யாண் சிங் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கல்யாண் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்காக குரல் கொடுத்தவர் கல்யாண் சிங். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை மேம்படுத்துவதற்காக அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்