மராட்டிய முதல்-மந்திரி குறித்து சர்ச்சை பேச்சு மத்திய மந்திரி நாராயண் ரானே கைது பா.ஜனதா கண்டனம்

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய மந்திரி நாராயண் ரானேவை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2021-08-25 00:31 GMT
மும்பை,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி. நாராயண் ரானே.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது மந்திரி சபையை விரிவாக்கம் செய்தபோது அவர் மத்திய சிறு, நடுத்தர தொழில்கள் துறை மந்திரியாக பதவி ஏற்றார்.

நாராயண் ரானே

மும்பையில் கடந்த சனிக்கிழமை மக்கள் ஆசி யாத்திரை நடத்திய நாராயண் ரானே, சிவாஜிபார்க்கில் உள்ள பால்தாக்கரே நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா். இதற்கு சிவசேனா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதேபோல சிவசேனா தொண்டர்கள் பால்தாக்கரேவின் நினைவிடத்தை பசு கோமியத்தால் சுத்தம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். மக்கள் ஆசி யாத்திரையின்போது நாராயண் ரானே, உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கடுமையாக பேசி வந்தார்.

சர்ச்சை பேச்சு

மேலும் ராய்காட் மாவட்டத்தில் மக்கள் ஆசி யாத்திரை நடத்தியபோது, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை கடுமையாக சாடினார். கடந்த ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின உரையாற்றிய உத்தவ் தாக்கரே, இந்தியா சுதந்திரம் பெற்ற வருடத்தை கூட மறந்துவிட்டதாக தாக்கிப்பேசினார்.

இதுபற்றி அவர் பேசுகையில், ‘‘முதல்-மந்திரிக்கு நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டு கூட தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. சுதந்திர தின உரையின் போது ஆண்டை கணக்கிட்டு கூறுமாறு பின்னால் திரும்பி உதவியாளரிடம் கேட்கிறார். நான் அங்கு இருந்து இருந்தால், அவரை ஓங்கி அறைந்து இருப்பேன்’’ என்றார். நாராயண் ரானேவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிவசேனாவினர் கொந்தளிப்பு

மேலும் சிவசேனா தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிவசேனா தொண்டர்கள், அவரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.

நாராயண் ரானே 50 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை செம்பூரில் கோழிக்கறி கடை நடத்தியதை நினைவுகூரும் வகையில் சிவசேனா இளைஞர் அணியினர் போஸ்டர் ஒட்டினர். இதை தொடர்புபடுத்தி நூதன முறையில் பல்வேறு இடங்களில் போராட்டமும் நடத்தினர்.

மும்பை ஜூகு பகுதியில் உள்ள நாராயண் ரானே பங்களா முன் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அமராவதியில் பா.ஜனதா அலுவலகத்தை சூறையாடினர். புனேயில் வணிக வளாகம் மீது கல்வீசி தாக்கினர்.

இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அதிரடி கைது

இதேபோல நாராயண் ரானேவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன. இதில் நாசிக்கில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாராயண் ரானேயை உடனடியாக கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு அந்த நகர போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டே போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர் மத்திய மந்திரி என்பதால், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கைது செய்யும்படியும் அறிவுறுத்தினார்.

நாராயண் ரானே ரத்னகிரி மாவட்டம் சிப்லுனில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக நாசிக் நகர துணை கமிஷனர் சஞ்சய் பார்குந்த் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர். இதில் நேற்று மதியம் மக்கள் ஆசி யாத்திரையின் இடையே உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த மத்திய மந்திரி நாராயண் ரானேயை அதிரடியாக கைது செய்தனர்.

போலீஸ் நிலையத்துக்கு

உடனடியாக அவர் சங்கமேஷ்வரில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது தனக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகம் இருப்பதாக நாராயண் ரானே கூறினார். இதனால் டாக்டர் ஒருவர் அங்கு வரவழைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

மத்திய மந்திரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐகோர்ட்டில் தள்ளுபடி

முன்னதாக தனது மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும்படியும், கைது நடவடிக்கையில் இருந்து நிவாரணம் வழங்கும்படியும் நாராயண் ரானே தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.

பா.ஜனதா கண்டனம்

மத்திய மந்திரி நாராயண் ரானே அதிரடியாக கைது செய்யப்பட்டதற்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய மந்திரி நாராயண் ரானேவை மராட்டிய அரசு கைது செய்தது அரசியலமைப்பு மதிப்புகளை மீறுவதாகும். இதுபோன்ற நடவடிக்கையால் நாங்கள் பயப்படவோ, அடங்கி போகவோ மாட்டோம்.

ஆசி யாத்திரையால் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் மகத்தான ஆதரவால், இவர்கள் சிரமப்படுகிறார்கள்?. ஜனநாயக முறையிலான எங்களது போராட்டம் நீடிக்கும். எங்களது பயணம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ், மராட்டிய பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்-மந்திரி

மராட்டியத்தில் கொங்கன் மண்டலத்தில் பலம் வாய்ந்த தலைவராக இருப்பவர் நாராயண் ரானே. இவர் 1960-களில் சிவசேனாவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

1999-ம் ஆண்டு சிவசேனா-பா.ஜனதா கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய போது, சிவசேனா சார்பில் நாராயண் ரானேக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்து அக்கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே அழகு பார்த்தார்.

இந்தநிலையில் பால்தாக்கரே மற்றும் அவரது மகன் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சிவசேனாவில் இருந்து விலகிய நாராயண் ரானே, 2005-ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் மந்திரி பதவி வகித்தார்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நாராயண் ரானே காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கி, பின்னர் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்