மும்பையில் பலத்த மழை; ஓரிரு இடங்களில் நிலச்சரிவு

மும்பையில் மீண்டும் பெய்த பலத்த மழை காரணமாக ஓரிரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

Update: 2021-08-31 22:04 GMT
மும்பை,

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை நீண்ட இடைவெளிக்கு பிறகு மும்பை உள்பட பல இடங்களில் மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. இதனால் நேற்று மும்பை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று இரவு முதல் பலத்த மழையை தொடர்ந்து தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது.

குறிப்பாக அந்தேரி, பரேல், பாண்டுப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மும்பை சாக்கிநாக்கா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஒருவர் காயமடைந்தார். மேலும் அசல்பா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலாடு அருகே குரார் அம்பேத்கர் நகரில் நேற்று காலை 10.15 மணி அளவில் பாறைகள் உருண்டு மண் சரிந்தது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதே போல கடந்த 30-ந்தேதி சாக்கிநாக்கா ஜி.எம்.எம். சாலையில் உள்ள பொதுக்கழிவறை அருகே ஒரு வீட்டின் மேலே சில கற்கள் சரிந்து விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் 47 வயது நபர் ஒருவர் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை கொலாபாவில் 29.8 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. சாந்தாகுருஸ் பகுதியில் 49 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்