மும்பை அருகே துணி ஆலையில் கொதிகலன் வெடித்து 2 தொழிலாளிகள் பலி

மும்பை அருகே பொய்சர் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள துணி ஆலையில் கொதிகலன் வெடித்து 2 தொழிலாளிகள் பலியானார்கள். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-09-04 22:04 GMT
பயங்கர சத்தத்துடன் வெடித்த கொதிகலன்
மும்பையை அடுத்த பால்கர் மாவட்டம் பொய்சர் எம்.ஐ.டி.சி பகுதியில் ஜக்காரியா என்ற துணி ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நேற்று காலை 6 மணி அளவில் ஆலையின் காட்டன் துணி தயாரிக்கும் பிரிவில் 8 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது வெடிகுண்டை போல பயங்கர சத்தத்துடன் கொதிகலன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் சுமார் 3 கி.மீ. சுற்றளவு தூரம் கேட்டதால் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். கொதிகலன் வெடித்ததன் காரணமாக ஆலையில் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

2 தொழிலாளர்கள் பலி
மேலும் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது மித்திலேஷ் ராஜ்வன்சி, சோட்டேலால் சரோஜ் ஆகிய தொழிலாளிகள் உடல் சிதறி பிணமாக கிட்தனர். மேலும் கணேஷ் பாட்டீல், அரவிந்த் யாதவ், முரளி கவுதம், அமித் யாதவ், முகேஷ் யாதவ், உமேஷ் ராஜ்வன்சி ஆகிய 6 பேர் படுகாயத்துடன் கிடந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்